உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் துறைசார்ந்த நுகர்வோர் காலாண்டு கூட்டம்
நோயாளிகள் நலனுக்கு ஆபா (ABHA) பதிவு அவசியம் மருத்துவக்கல்லூரி டீன் தகவல்
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துறை சார்ந்த நுகர்வோர் காலாண்டு ஆலோசனைக் கூட்டம் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசன் தலைமை தாங்கினார். குடிமை மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மற்றும் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகளாக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சு. சிவசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், PRO முகமது இஸ்மாயில், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், உதகை தொகுதி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அமீர்கான், நிர்வாகி இம்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெளிநோயாளிகள் பிரிவில் கூடுதல் இருக்கை வசதிகளை ஏற்படுத்துதல், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணித்தல், ஆபா (ABHA) அட்டை இல்லாததால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களுக்கு தீர்வு காணுதல், டயாலிசிஸ் பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் சிரமங்களை உடனடியாக சரிசெய்தல், தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசன் பேசியதாவது:
"மருத்துவத் துறையில் தரமான சிகிச்சையை வழங்கவும், நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை எளிதாக அறிந்து சரியான நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவும் ஆபா (ABHA) மருத்துவ பயனாளர் அடையாள அட்டை பதிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஐந்தாம் கட்டத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக தற்போது ஆபா பதிவு நடைபெற்று வருகிறது. ஆபா பதிவு செய்திருந்தால் இந்தியாவின் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை அறிந்து தேவையான சிகிச்சையை விரைவாக பெற முடியும். தற்போது ஆபா பதிவு செய்யாதவர்களுக்கும் வழக்கம்போல் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. டயாலிசிஸ் பிரிவில் சமீபத்தில் ஏற்பட்ட மின்தடையால் சிறிது நேரம் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக சீரமைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் மருத்துவமனைக்கு தனி துணை மின் நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி சராசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 சிறப்பு மருத்துவத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இருதயம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவையாக வழங்கப்பட்டு வருகின்றன.
உதகை – கோவை இடையேயான நீண்ட தூரம் காரணமாக அவசர மருத்துவ சேவைகளில் சிரமம் ஏற்படுவதால் கூடுதலாக ஆறு சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகளை தொடங்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உருவாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளை (Biomedical Waste) அகற்ற ஆண்டுக்கு சுமார் ரூ.30 லட்சம் செலவாகிறது. பிற கழிவுகள் நகராட்சி மூலம் அகற்றப்படுகின்றன. மேலும் ஒரு நாளைக்கு சுமார் மூன்றாயிரத்துக்கு மேல் இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பன்னிரெண்டு லட்சத்து எண்பது ஆயிரம் பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தைராய்டு பரிசோதனை மட்டும் வியாழன் கிழமைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
நோயாளிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் மேலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்க முடியும்," என்றார். கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி நிர்வாக துறை அலுவலர்கள் சந்தோஷ், அபிலாஷ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment