கடக்கோடு ஹட்டியில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்தீஸ் மற்றும் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கடக்கோடு கிராமத்தில் 22.06.2026 திங்கட்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குனர் திருமதி. S.ஜெயலட்சுமி அவர்கள் தலைமை வகித்து அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் ,உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் குறித்தும் விளக்கினார். இப்பயிற்சியில் உதகை மண்ணாய்வு கூட வேளாண்மை அலுவலர் திருமதி. நிர்மலா அவர்கள் அங்கக வேளாண்மையில் மண்வளத்தின் இன்றியமையாமை குறித்தும், மண் மாதிரி சேகரிப்பு முறைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திருமதி.பிரியா அவர்கள் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும், இன்றைய நிலையில் வேளாண்மையில் இயந்திரங்களின் தேவைகள் குறித்தும் விளக்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர் திருமதி. சுலோச்சனா அவர்கள் கறவை மாடுகளின் பராமரிப்பு முறைகள் குறித்தும், கால்நடை பராமரிப்பு துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் மானிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். உதகை வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி முனைவர். மணிவாசகம் அவர்கள் தேயிலை பயிரில் ஊடுபயிராக மகோகனி சாகுபடி குறித்தும் ,பலபயிர் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். முன்னோடி விவசாயி திருமதி. விமலா அவர்கள் கிரீன் டீ , ஆலாங் டீ மற்றும் சில்வர் டிப் டீ தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் அங்கக இடுபொருள் ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு.P. பரத்குமார் அவர்கள் தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் அனைவரையும் வரவேற்றார். சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக அறிவு செல்வன் உதவி தொழில்நுட்ப மேலாளர் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment