பந்தலூர் வருவாய்த்துறை, நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து பொதுமக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
நெல்லியாளம் நகராட்சி தூய்மை பணி உதவியாளர் மலர்க்கொடி, தூய்மை தூதுவர்கள் சிந்து, சரஸ்வதி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது வரும் சட்டமன்ற தேர்தலில் எவ்வித தூண்டுதலுக்கும் ஆளாகாமல், நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும். வாக்கிற்கு வாங்கும் பணம் ஊழலுக்கு வழிவகுத்து, மாநிலத்தின் - நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். நேர்மையுடன் நல்லவர்களை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் வாக்கு பதிவு இயந்திரத்தில் கடைசியில் உள்ள நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் என்றார்.
பந்தலூர் வருவாய் ஆய்வாளர் சிவகுமார் பேசும்போது வாக்காளர் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள் ஏதேனும் ஒன்று எடுத்து செல்லலாம். யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கு விவிபேட் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "கண்டிப்பாக வாக்களிப்பேன்" என்ற விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டனர்.
நிகழ்ச்சியில் நெல்லியாளம் நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:
Post a Comment