வெப்ப சலன விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்
கூடலூர் திவ்யா தட்டச்சு பயிற்சி மையத்தில் வெப்ப சலன பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்க நடமாடும் மருத்துவக் குழு, திவ்யா தட்டச்சு பயிற்சி மையம், கார்மேல் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சேரம்பாடி மற்றும் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் பந்தலூர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாமிற்கு திவ்யா தட்டச்சு பயிற்சி மைய முதல்வர் எபினேசர் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கூடலூர் ரெப்கோ வங்கி (மைக்ரோ பைனான்ஸ்) கூடலூர் கிளை மேலாளர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கார்மேல் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் தனராஜ் முகாமை துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஜேன் மார்டினெஸ் பேசும்போது வெயிலின் தாக்கத்தால் தலைசுற்றல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம், சிறுநீர் மஞ்சளாக போவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். மிகவும் சேர்வாக இருக்கும் போது உடனே நிழலுக்கு சென்று ஓய்வு எடுக்கவும், தண்ணீர் அல்லது பலரசங்கள் குடித்து உடலில் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வெயிலில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் அவர்களை அதிகம் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது மோர், இளநீர், எலுமிச்சை சாறு குடிக்கலாம், அதுபோல வெளிர் நிற, இறுக்கமில்லாத பருத்தி ஆடைகள் அணியுங்கள். கருப்பு மற்றும் அடர் நிறங்கள் சூட்டினை அதிகப்படுத்தும். எண்ணெய், காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்து கொண்டு நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் ஜேன் மார்டினெஸ் தலைமையில் மருந்தாளுநர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக அலுவலர் லாய்சன் உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர். தேவை உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதுபோல கண் தொழில்நுட்ப உதவியாளர் பாக்யா கிட்டப்பார்வை, தூரப்பார்வை பரிசோதனை செய்து தேவைபட்டவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கினார்.
முகாமில் பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments:
Post a Comment