கிணறு தோண்டும்போது மண் சரிந்து விபத்து கீழ்கோத்தகிரி அருகே இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு
நீலகிரி: கீழ்கோத்தகிரி அருகேயுள்ள ஒன்னட்டி கிராமத்தில் கிணறு வெட்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில், இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்னட்டி கிராமம் அருகே அமைந்துள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கிணறு தோண்டும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கிணற்றின் சுற்றுப்பகுதியில் இருந்த மண் திடீரென சரிந்து விழுந்தது. இதில், ஒன்னட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (30), சதீஷ்குமார் (32)ஆகிய இருவரும் மண் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற தொழிலாளர்கள் கிணற்றின் எதிர்புறத்தில் இருந்ததால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மீட்புப் பணி சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கோத்தகிரி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து, மண் இடிபாட்டில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக, சோலூர் மட்டம் – கோத்தகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு கேள்விக்குறி தனியார் தோட்டங்களில் நடைபெறும் கிணறு தோண்டும் பணிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?என்ற கேள்வியை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தீனதயாளன்


No comments:
Post a Comment