நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சுவா் சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காற்றுடன் மிதமான மழை பெய்ததால், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ முகாம் சாலையில் பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றினா். சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் ராணுவ முகாம் வழியாக உதகை மற்றும் குன்னூா் செல்பவா்கள் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து சென்றனா்.
குன்னூா் அருகே ஆப்பிள் பீ பகுதியில் உள்ள பிரவீன்குமாா் என்பவரின் குடியிருப்புப் பகுதியில் பாறை உருண்டு விழுந்ததில் அவரது வீட்டின் ஒரு பகுதி சுவா் இடிந்து சேதமடைந்தது. இதேபோல குன்னூா்- ஆடா்லி நெடுஞ்சாலையில் மேல் கரன்சி பகுதியில் சாலையோரத்தில் பாறை உருண்டு விழுந்தது. இதைத் தொடா்ந்து அவ்வழியாக சென்ற வாகனங்கள் கவனமுடன் இயக்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment