உதகை- மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் அமைந்துள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளிகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நம்பிக்கையூட்டும் கணிதம் மற்றும் நவீன அறிவியல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. கிறிஸ்டியன் பியூலா அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே. ராஜூ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்கள்.....
இயற்கை எல்லோரையும் வஞ்சிப்பதில்லை ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால் மற்றொன்றில் நிறை இருக்கும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இயற்கை ஒரு சிறப்பு கொடையை வழங்கியுள்ளது. அதுதான் கூர்மையான அறிவு. இந்த அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள ஒரு சிறப்பான கருவிதான் கணிதம். அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளான மாணவர்கள் இயற்கை தங்களுக்கு அளித்துள்ள கொடை எது என்பதை புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய கழுத்துக்கு கீழ் முழுமையாக செயலற்றிருந்த நிலையிலும் அவர் ஒரு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்தார். அவர் போன்று பல மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி வருவதை நம்மால் காண முடிகிறது. பார்வை திறனை முற்றிலும் இழந்த ஒருவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மாணவர் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஆகவே மாற்றுத் திறனாளிகள் தங்கள் குறைபாடுகளை நினைத்து சோர்வடைய வேண்டியது இல்லை. நவீன அறிவியல் பல வகைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு துணையாக உள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு ஹெல்மெட் கண் பார்வையற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் எளிதாக நடமாட துணை புரிகிறது. ஒரு சிறிய சிலிக்கான் சிப்ஸ் கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டு அவற்றை இயற்கையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எந்த வேலையை செய்வதற்கும் மனதால் நினைத்தால் செயற்கை அங்கங்கள் வேலை செய்யும். கை கால்கள் செயலற்று படுக்கையில் படுத்தவாறு இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கண் அசைவின் மூலம் ஒரு கம்ப்யூட்டரை திறம்பட இயக்க முடியும். இது போன்ற பல கண்டுபிடிப்புகள் மாற்றுத் திறனாளிகளுக்கு இயல்பான வாழ்க்கை வாழ துணை புரிகின்றன. எனவே மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் குறைகளை ஒரு சாபமாக நினைக்காமல் வரமாக நினைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்யலாம் என்பன போன்ற பல நம்பிக்கையூட்டும் கருத்துக்களை ஆசிரியர் ராஜூ கூறினார். கணிதத்தில் சிறப்பான திறமை பெற்ற மாணவர் பிரேம்குமார் அவர்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து பாராட்டப்பட்டார். ஆசிரியர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினரின் கருத்துரைகளை மாணவர்களுக்கு புரியும் மொழியில் மொழி பெயர்த்தார். முன்னதாக ஆசிரியர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment