கோத்தகிரி சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளுமா நிர்வாகம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 December 2024

கோத்தகிரி சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளுமா நிர்வாகம்.

 


கோத்தகிரி சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளுமா நிர்வாகம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் உள்ள ரைஃபில் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில்  ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளது

 

தமிழக அரசு சதுப்பு நில வாரியம் அமைத்து மாநிலத்தில் உள்ள  நூறு  சதுப்பு நில பகுதிகளை பாதுகாத்து வருகிறது. அதில் கோத்தகிரியில் உள்ள  ராம்சார்சைட் அங்கீகாரம் பெற்ற லாங்வுட் சோலையும் ஒன்று. லாங்வுட் சோலையின் அருகில் உள்ள ரைபிள் ரேஞ்ச்  சதுப்பு நிலம் கோத்தகிரி நகரின்  முக்கிய நீராதாரமாக உள்ளது.  அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்காகவும் வழிபாட்டு தலத்திற்காகவும் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலர்  கே. ஜே. ராஜு அவர்கள் கூறியதாவது.....

 

கடந்த ஆட்சியின் போது  ரைஃபில் ரேஞ்ச் நீர் ஆதாரத்தின் மீது  சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம்  அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் கட்டுவதற்கான திட்டமிடப்பட்டது. பொதுமக்களுடைய  கோரிக்கையை ஏற்று அன்றைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  அவர்கள் அந்த கட்டுமானத்திற்கு தடைவிதித்து  சதுப்பு நிலத்தை பாதுகாத்தார்.  இதன் ஒரு பகுதி அரசு ஆவணங்களில் மைதானம் என்று உள்ளதை  சதுப்பு நிலம் என அறிவிக்க வேண்டும்  என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இது குறித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இதனை சதுப்பு நிலமாக அறிவிக்கும்  செயல்முறைகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்ற சதுப்பு நிலங்கள்  நீர் மேலாண்மை, பல்லுயிர் சூழல் பாதுகாப்பு, கார்பனை உறிஞ்சி காலநிலை மாற்றத்தை சமப்படுத்துதல் போன்ற இயற்கை செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. தற்போது ரைபிள் ரேஞ்ச்  சதுப்பு நிலம்  நூற்றுக்கணக்கான வாகனங்களின் நிறுத்துமிடமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது. மேலும் ராம்சந்த்  குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் சாக்கடை நீர்  இந்த நீர் ஆதாரத்தை மாசுபடுத்துகிறது. இது குறித்து பலமுறை  மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. முறையாக சர்வே மேற்கொள்ளப்பட வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இந்த சதுப்புநிலத்தை சுற்றி வேலியிட்டு பாதுகாக்க வேண்டும், அங்குள்ள கற்பூர மரங்களை அகற்ற வேண்டும், சுமார் ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நான்கு கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என்பன போன்ற பொதுமக்களின் நீண்டகால  கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒரு  வனப்பகுதியையோ  அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியோ  ஆக்கிரமிப்பு செய்ய பொதுவாக மக்கள் அங்கு ஒரு சிறு வழிபாட்டுத் தலத்தை  அமைப்பார்கள். அத்தகைய ஒரு   முயற்சி ரைபிள் ரேஞ்சில் நடைபெறுவதாக தெரிகிறது. இந்த சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி வேலி இட்டு வாகனம் நிறுத்துவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதி அங்கு வரும் ஊற்று நீரை  வழிமாற்றி விடப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள்  சதுப்பு நிலத்தை அழிவில் கொண்டு போய்விடும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு  இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சதுப்பு நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ரைபிள் ரேஞ்சில் உள்ள பழைய பீர் தொழிற்சாலை கட்டடத்தை வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமாக மாற்றி சதுப்பு நிலத்தின் மீது வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad