பந்தலுார் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் அகற்ற வலியுறுத்தி 'நோட்டீஸ்'
பந்தலுார் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்ற வலியுறுத்தி, ஊராட்சி சார்பில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பஜார் பகுதியில் வருவாய் துறைக்கு, சொந்தமான நிலம் உள்ளது. 'இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அனுமதி பெறாமல் கடைகள் கட்டப்பட்டு வருகிறது,' என, அட்டக்கடவு என்ற இடத்தை சேர்ந்த ரெஜி என்பவர், 'மாவட்ட கலெக்டர்; கூடலுார் ஆர்.டி.ஓ; பந்தலுார் தாசில்தார்,' ஆகியோருக்கு புகார் மனுக்களை அனுப்பி இருந்தார்.அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து, ஊராட்சியில் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த ஆக்கிரமிப்பாளர் சந்திரிகா என்பவருக்கு, சேரங்கோடு ஊராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இது குறித்து ஆக்கிரமிப்பாளர் கண்டுகொள்ளாத நிலையில், 'உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்தை உடனடியாக நிறுத்தி, ஆக்கிரமிப்பாளர் தனது சொந்த செலவிலேயே இடிக்க வேண்டும்; அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு ஆக்கிரமிப்பாளர் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்,' என்றும் அறிவுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவர் லில்லி ஏலியாஸ், அனுமதி இல்லாத கட்டத்தில் 'நோட்டீஸ்' ஒட்டி உள்ளார். மக்கள் கூறுகையில்,'ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வருவாய் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment