கோத்தகிரி கிரீன்வேலி பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கோத்தகிரி கிரீன் வேலி மெட்ரிக் மேல்நிலை பள்ளி நாட்டு நல பணித்திட்ட முகாமில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் செல்லையா அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் கங்காதரன் அவர்கள் அவர்கள்முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்கள்.....
உலக அளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. உயிர்ச்சூழல் மண்டலத்தில் இந்தியாவின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக நீலகிரி உள்ளது. ஐந்து வகையான காடுகள் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாலூட்டிகள் 350 வகையான பறவைகள் 91 வகையான ஊர்வனங்கள் 300 வகையான வண்ணத்துப்பூச்சிகள் என நீலகிரி பல்லுயிர் சூழலின் சொர்க்கமாக விளங்குகிறது. நீலகிரியில் உருவாகும் ஒன்பது ஆறுகள் காரணமாக இதனை தென்னிந்தியாவின் நீர் தொட்டி என்று கூறுவார்கள். சோலைகளும் புல்வெளிகளும் நீலகிரி சுற்றுச்சூழலின் முக்கியமான இரண்டு அம்சங்கள் ஆகும். சோலை காடுகள் மழை நீரின் 75% உள்வாங்கி பூமியில் தேக்கி வைக்கிறது. அதிலிருந்து தான் சிறு சிறு ஊற்றுக்களும் ஓடைகளும் உருவாகி சமவெளிப் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக நீலகிரி விளங்குகிறது. புல்வெளிகள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீரை கொடுக்கிறது. சுமார் 25 வகையான பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் நீலகிரிக்கு வலசம் வருகின்றன. சைபீரியாவில் இருந்து வரும் கருப்பு மைனா, ஆப்கானிஸ்தானத்திலலிருந்து வரும் காஷ்மீர் பிளைகேச்சர், பங்களா தேசத்திலிருந்து வரும் வாலாட்டிக் குருவிகள் இமயமலையிலிருந்து வரும் வுட்காக் போன்ற பல பறவை இனங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறந்து இங்கு வருவது நீலகிரியின் ஒரு சிறப்பம்சம் ஆகும். நீலகிரியில் 25 வகையான குறிஞ்சி செடிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 13 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சியும் வருடம் தோறும் பூக்கும் குறிஞ்சி என பல வகையான குறிஞ்சி மலர்கள் நீலகிரிக்கு பெருமை சேர்க்கின்றன. பூச்சிகளைப் போல பறவைகளைப் போல காட்சியளிக்கும் ஆர்கிட் மலர்கள் 175 வகை இங்கு காணப்படுகிறது. நீலகிரியின் பெரும்பான்மையான புல்வெளிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதன் காரணமாக மனித விலங்குகள் மோதல் உண்டாகிறது. மசினகுடியில் இருந்து மோயாறு வரை வருடத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட யானைகள் வலசம் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். முதுமலை புலிகள் காப்பகத்தில் 35 புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கைதான் ஒரு காட்டின் வளத்தை காட்டும் குறியீடாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள காப்புக் காடுகளில் காணப்படும் கற்பூரம் சீகை போன்ற அந்நிய தாவர வகைகளை அகற்றி உள்ளூர் தாவர இனங்களை வளர்க்கும் பட்சத்தில் கூடுதலாக 40 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் உருவாகும் என்பன போன்ற பல செய்திகள் மாணவர்களுக்கு கூறப்பட்டது. மாணவர்கள் 50 மரக்கன்றுகளை நட்டனர். முன்னதாக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பிரவீன் அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment