பசுமை குழந்தைகள் தின விழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 November 2024

பசுமை குழந்தைகள் தின விழா.

 


பசுமை குழந்தைகள் தின விழா. 


 கோத்தகிரி அருகே உள்ள இட்டகல் பகுதியில் அமைந்துள்ள முத்தையா நினைவு மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில்  குழந்தைகள் தின விழா பசுமை குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் ஜெயராமன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தொழிலதிபர் போஜராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது  பள்ளி வளாகம் முழுவதும்  மரங்கள் நடப்பட்டு பள்ளி ஒரு குருகுலம் போன்ற   இயற்கையுடன் ஒன்றிய வகையில் மாற்றி அமைக்கப்படும் எனக் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கே. ஜே. ராஜு அவர்கள் பேசும்போது கூறிய கருத்துக்கள் .....

 

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பச்சை காய்கறிகள் பழ வகைகள்  மிகவும் அவசியம். மாணவர்கள் ஏராளமான காய்கறிகளையும் பழ வகைகளையும் உண்ண வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் காலநிலை மாற்றம் மற்றும்  புவிவெப்பத்திற்கு காரணமான அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.


மேலும் தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் 29ஆவது   சர்வதேச சுற்றுச்சூழல் மகாநாட்டில் 2030 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பத்திற்கு காரணமான கார்பனின் அளவை குறைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான  கார்பன் டை ஆக்சைடு வெளியீடு உலக அளவில் 0.8% வரை உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கார்பன் வெளியீடு கடந்த ஆண்டை விட  4.6 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சைனா உலக அளவில் 31% கார்பனை வெளிவிடப் போகிறது. அமெரிக்கா 13 சதவீதமும் இந்தியா எட்டு சதவீதமும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏழு சதவீதம் என கார்பனை வெளிவிடப் போகின்றன  என விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர் ஒவ்வொரு அமெரிக்கரும் ஆண்டிற்கு மூன்று புள்ளி ஒன்பது டன் கார்பன் டை ஆக்சைடு வெளிவிடுகின்றனர். ஒரு இந்தியரின் சராசரி கார்பன் வெளியீடு ஆண்டுக்கு 600 கிலோ எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகம்  என்பது கவனிக்கத்தக்கது. 2030 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தை பொறுத்த வரையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்பன் வெளியிட்டை பூஜ்ஜியம் சதவீதத்திற்கு கொண்டு வருவது பூமியின் வெப்பத்தை 1.5° c-க்குள் நிலை நிறுத்துவது போன்ற 16 குறியீடுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது. ஆனால் இவற்றில் எதுவும் நடைபெறப் போவதில்லை என விஞ்ஞானிகள் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அதிக அளவு கார்பனை வெளிவிடும் பணக்கார நாடுகள் குறைந்த அளவு கார்பனை வெளிவிடும் ஏழை நாடுகளில் காடுகளை வளர்ப்பதன் மூலம் தங்களது அதிகப்படியான கார்பன் வெளியீட்டை சமப்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை கொடுப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  இந்தத் திட்டத்திற்கு  உடன்பட மாட்டார். இதன் விளைவாக மற்ற பணக்கார நாடுகளும் கார்பன் நிதியிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ன  சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். இனி பூமியை காப்பது  உலகத் தலைவர்களின் கைகளில் இல்லை. சாமான்ய மனிதர்களின் கையில் தான் இருக்கிறது என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு  அவர்கள் கூறினார். கோத்தகிரி அரிமா சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர ரெட்டி, செயலர் ரமேஷ், காலநிலை மீட்டெடுத்தல் - பசுமை நீலகிரி 2024 திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நடுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad