ஆல்ஃபா ஜிகே பள்ளியில் சுற்றுசூழல் கருத்தரங்கு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 October 2024

ஆல்ஃபா ஜிகே பள்ளியில் சுற்றுசூழல் கருத்தரங்கு.


ஆல்ஃபா ஜிகே பள்ளியில் சுற்றுசூழல் கருத்தரங்கு.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் உள்ள ஆல்ஃபா ஜி கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர்  அமுதா விஸ்வநாதன்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே .ஜே . ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள்.....

 

தற்போது உலகெங்கும் மிகப் பரவலாக விவாதிக்கப்படுகிற பொருள் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் என்பதாகும். கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.41 டிகிரி வரை உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வரும் 2028 க்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரியை தாண்டும் என அறிவியலாளர்கள்  கூறுகின்றனர். அப்பொழுது  காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை முழுமையாக நம்மால்  உணர முடியும். புவி வெப்பத்திற்கு காரணமான கார்பன்-டை-ஆக்சைடு மீத்தேன்  போன்றவற்றின் அளவு பூமியின் தாங்கும் திறனை விட மிக அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அதீத காலநிலைதான் இனிமேல் நிலவும். அதிக அளவு புயல்களின் எண்ணிக்கை, தொடர் மழை, வெப்ப அலைகள், வறட்சி என காலநிலை மாற்றத்தின் தாக்கம் மனித சமுதாயத்தை மட்டுமல்ல ஏனைய உயிரினங்களையும் மிரட்டுகிறது. புவி வெப்பம் அதிகரிக்கும் போது கொசு மற்றும் வைரஸ்களின் எண்ணிக்கை பெருகும். அப்போது டெங்கு போன்ற பல தொற்று நோய்கள் பரவும். அண்மையில் தோன்றி பூமியை சீரழித்த கரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பனி மலைகள் உருகும் போது கடல் மட்டம் உயரும். இதனால் கடற்கரையோர  நகரங்கள் பெரும் அழிவை சந்திக்கும். இமயமலையில் மட்டும் இதுவரையில் அறிவியல் பூர்வமாக கண்டறியப்படாத 14 வகையான வைரஸ்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பனிமலை உருகும் போது இந்த வைரஸ்கள் சமவெளி பகுதிக்கு வந்து பேரழிவை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இயற்கைக்கு மனித இனம் போன்ற ஓர் இனம் அழிவதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் மனித குலத்திற்கு இயற்கை இல்லாமல் வாழ்வில்லை. பூமி தனது ஆறாவது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒவ்வொரு நாளும் 372 உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 50,000 உயிரினங்கள் அழிவை நோக்கி செல்லும் என அறிவியல் கூறுகிறது. மனித குலம் வாழ பூமியின் இயற்கை வளங்கள் காப்பாற்றப்பட வேண்டும். நாம் தற்போது இரண்டு பூமிகள் உருவாக்கும் ஆற்றல் வளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்  என ஒரு ஆய்வு கூறுகிறது. எந்த வகையில் பார்த்தாலும் பூமியை காக்க நம் முன் உள்ள ஒரே ஒரே தீர்வு மரம் செடிகளை வளர்த்து பசுமை பரப்பை அதிகரிக்க செய்வதாகும். காடுகளின் அழிப்பால் 872 உயிரினங்கள் கடந்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்துவிட்டது என ஒரு ஆய்வு கூறுகிறது.  வளர்ச்சியின் பெயரால் பொருட்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையோ இல்லையோ பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் வியாபார உத்தியை மேற்கொண்டுள்ளன. மார்க்கெட்டிங் துறையில் நியூரோ  மார்க்கெட்டிங் என்ற துறை மக்களை எவ்வாறு பொருட்களை வாங்க வைக்க வேண்டும் என மனதளவில் செய்ய வேண்டிய செயல்களை விரிவாக கூறுகிறது. நீண்ட நாட்கள் உழைக்கும் பொருட்கள் தற்பொழுது உற்பத்தி செய்யப்படுவதே இல்லை. குறைந்த காலத்தில் பயன்படுத்தி தூக்கி எறியும் வகையில் தான் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக வீணடிக்கப்படும் ஆற்றல் கணக்கில் அடங்காதது. பூமியை காக்க ஒவ்வொருவரும் நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு தேவைக்கு அளவான பொருட்களையே வாங்க வேண்டும் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு  அவர்கள் கூறினார். முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் சதீஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சந்தியா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்களுக்கு பழ மரங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


காலநிலை மீட்டெடுத்தல் - பசுமை நீலகிரி 2024 திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அரிமா மோகன் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர்   K . A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad