நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுடன் துறை ரீதியான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உதகை போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மண்டல பொது மேலாளர் முரளி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி மகேந்திரபூபதி, கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க துணை தலைவர் சுப்பிரமணி, புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் சலீம் உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அர்ஜூனன் ஆகியோர் பங்கேற்று நுகர்வோர் சார்ந்த குறைகளை சுட்டி காட்டி பேசும்போது கோத்தகிரி மைசூர் பேருந்து குன்னூர் செல்லாமல் உதகை வந்து செல்ல வேண்டும். உதகை கோத்தகிரி வழித்தடத்தில் உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்கபட வேண்டும். சோலூர்மட்டம் பகுதியில் செல்லும் பேருந்து கொட்டகாம்பை வரை இயக்க வேண்டும். நடத்துனர்கள் சிலர் சில்லறை தராமல் அலைகழிக்கும் போக்கு உள்ளதை தடுக்க வேண்டும். போக்குவரத்து கழகம் சார்ந்த குறைபாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் கடிதங்கள் அனுப்பினால் நடவடிக்கை எடுத்து பதில் கடிதம் அனுப்பி வைக்க வேண்டும். கீழ்குந்தா வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தினை காலை மாலை உதகை மஞ்சூர், ஓனிகண்டி, தூனேரி, கீழ்குந்தா இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துகளில் பயணிகள் நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாற்று சக்கரம் வேறு இடத்தில் வைக்க வேண்டும். பந்தலூர் நேர காப்பாளர் நியமிக்க வேண்டும். திருச்சி உள்ளிட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்வதில் இருவருக்கு ஒரே இருக்கை பதிவாகும் நிலை தொடர்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். உதகை பெங்களூர் பேருந்தில் மூட்டை பூச்சி உள்ளதை சரி செய்ய வேண்டும். மாணவர்கள் நலன்கருதி கூடலூர் - பந்தலூர், கூடலூர் - ஓவேலி வழித்தடங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். தொரப்பள்ளி கோடாமூலா பகுதி மாணவர்களை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். அத்திகுன்னா பேருந்தில் அரசு விதிக்குட்பட்டு மகளிர் இலவச பயணம் அனுமதி வழங்க வேண்டும். உதகை எல்க்ஹில் பேருந்து பயணிகள் பயன்பெறும் வகையில் நேரம் மாற்றி இயக்க வேண்டும். உதகை காந்தள் பேருந்து சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.
பதில் அளித்த பொதுமேலாளர் பேசும்போது போக்குவரத்து கழக சேவை அனைத்து வகை மக்களுக்கும் சென்று சேரும் வகையில் இயக்கபடுகிறது. பெரும்பான்மையான பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு வருகிறது. 14 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகள் இயக்க இயலாது அதற்கு பதில் புதிய பேருந்துகள் பெறப்படுகிறது. மேலும் 7 வருடம் கடந்த பேருந்துகள் புது பாடி கட்டப்பட்டு இயக்கபடுகிறது. 30 சிறிய பேருந்துகளில் 14 பேருந்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக அனைத்து பேருந்துகளும் புதுப்பிக்கப்படும். ஜி பி எஸ் மூலம் பேருந்து இயக்கம் கண்காணிக்கப்படுகிறது. பயணசீட்டு வழங்க புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் பயணிகள் சில்லறை பிரச்சனை தவிர்க்கும் வகையில் டிக்கெட் கட்டணம் செலுத்த கியு ஆர் கோடு அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள் 20 நாளுக்கான பணம் செலுத்தி 30 நாட்கள் பயணிக்கும் சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது சம்பந்தபட்ட கிளைகளை அணுகி பயன்பெறலாம். சில்லறை தராமல் சென்றால் டிக்கெட்டின் பின்பக்கம் எழுதி வாங்கி கொண்டு தகவல் தெரிவித்தால் சில்லறை நடத்துனர் கணக்கில் பிடித்தம் செய்து வழங்கப்படும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் குறித்த முழுமையான தகவல் போக்குவரத்து கழகத்திற்கு தரவில்லை. சுமார் 50,000 மாணவர்கள் பயணிக்கும் நிலையில் 28,000 மாணவர்கள் குறித்த தகவல் மட்டுமே இலவச பயண சீட்டுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு உள்ளது. இதனால் பேருந்து மாணவ மாணவிகள் தேவை நலன் கருதி இயக்க சிரமம் ஏற்படுகிறது. ஒரு பேருந்து இயக்க 7.5 பணியாளர் சம்பளம் ஒதுக்கபடுகிறது ஆனால் வருவாய் குறைவாக உள்ளது. எனினும் மக்கள் நலன்கருதி போக்குவரத்து சேவை தொடர்ந்து செயல்படுத்த படுகிறது என்றார்.
கூட்டத்தில் துணை மேலாளர்கள் கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment