நீலகிரி மாவட்டம் குன்னூர் பாஸ்டியர் ஆய்வு மையத்தில் வெறி நாய்க்கடி மற்றும் பல நோய்களுக்கு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுகிறது. தேசிய ஸ்வச் பாரத் திட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்துள்ள ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் 'காலநிலை மீட்டெடுப்பு மற்றும் பசுமை நீலகிரி 2024' திட்டம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் பாஸ்டியர் ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் . சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் தமிழக அரசின் பசுமை விருது பெற்றவருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் கே. ஜே . ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள்.
பூமி உற்பத்தி செய்யும் ஆற்றல் வளத்தின் அளவும் மக்கள் பயன்படுத்தும் ஆற்றலின் அளவுக்கும் உள்ள விகிதம் அறிவியல் பூர்வமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் பூமியின் ஆற்றல் பெருக்க வளம் 1970 லேயே முடிவுக்கு வந்துள்ளது. 1970 க்கு பின்பு நாம் பயன்படுத்தும் ஆற்றல் வளம் பூமியினுடைய உற்பத்தி திறனை விட மிக அதிகமாக உள்ளது.ஹார்மோன் ஊசி மருந்து செலுத்தி ஒரு மாட்டினுடைய ரத்தத்தை பாலாக மாற்றும் செயல்தான் இப்பொழுது பூமியில் நடைபெறுகிறது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல் 1.8 பூமி இருந்தால் மட்டுமே சமன்படும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது .
அதாவது நாம் இப்போது பயன்படுத்தும் ஆற்றல் வளத்திற்கு இந்த பூமியை போல இன்னொரு பூமி வேண்டும் என்பது இதன் பொருளாகும். இந்த அழுத்தத்தை தாங்க முடியாத பூமி இப்பொழுது புவி வெப்பம், காலநிலை மாற்றம், புயல், வறட்சி, வெப்பம், காட்டுத்தீ போன்ற அதீத காலநிலை போன்றவற்றால் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறது. இந்த பூமி நமக்கானதல்ல நமது பிள்ளைகளுக்கானது. நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பூமியை நாம் நமது பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும். ஆகவே இந்த பூமியை காப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் பூமியை காக்க மரங்கள் நடுவதை தவிர வேறு வழி இல்லை. எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு நமது ஆற்றல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இல்லையெனில் பூமி எப்படி திருப்பி அடிக்கும் என்பதை அண்மையில் கேரளாவின் வயநாடு பேரிடர் காட்டுகிறது.
வீட்டுக்கு ஒரு மரம், ஒவ்வொருவருக்கும் ஒரு மரம் என்ற இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஆசிரியர் ராஜு அவர்கள் கூறினார்கள். பின்னர் நடைபெற்ற மரம் நடுதல் நிகழ்ச்சியில் ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் டாக்டர். பிரேம் குமார், முதல் நிலை ஆராய்ச்சி அதிகாரி மோகன், நிர்வாக அதிகாரி வைர மூர்த்தி, உதவி ஆராய்ச்சி அதிகாரி டாக்டர். ஜெகநாதன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். ஆராய்ச்சி மைய வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மரம் நடுவதற்கு நவீன குழி தோண்டும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்கள்9443317439, 9443379545 ஆகிய செல்போன் எண் களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment