வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு ஜிப்லைனில் சென்று 35 பேருக்கு சிகிச்சை அளித்த தமிழக நர்ஸுக்கு கல்பனா சாவ்லா விருது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு ஜிப்லைனில் சென்று 35 பேருக்கு சிகிச்சை அளித்த தமிழக நர்ஸுக்கு கல்பனா சாவ்லா விருது



  வயநாடு நிலச்சரிவு ஆற்றில், தனது உயிரையும் பொருட்படுத்தாது, தன் கையில் உள்ள மருத்துவ முதலுதவிப் பெட்டியோடு கவனமாக, ஜிப்லைன் மூலம் சென்று, 35 பேருக்கு சிகிச்சையளித்திருக்கிறார் சபீனா.கேரளத்தின் சூரல்மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், எதிர்த் திசையில் உள்ள நிலப்பகுதியில் சுமார் 35 மக்கள் காயங்களுடன் சிக்கிக் கொண்டனர். இதனால் வெள்ளத்தைக் கடந்து சென்று மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆற்றைக் கடக்க ஜிப்லைன் அமைத்து எதிர்த் திசைக்குச் சென்றனர்.



அப்படியும் அங்குச் சிக்கியிருந்தவர்களை அப்படியே இக்கரைக்கு அழைத்து வர இயலவில்லை. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தேவைப்பட்டது. எனவே, இங்கிருந்து அக்கரைக்கு ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளிக்க ஆண் நர்ஸ்களை மீட்புக்குழுவினர் தேடினர். ஆனால், அப்போதைக்கு அங்கு ஆண்கள் யாரும் இல்லை. அதனால் கூடலூரைச் சேர்ந்த நர்ஸ் சபீனா, தானே ஜிப்லைனில் அக்கரைக்குச் செல்வதாக மீட்புக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.


எப்படி ஒரு பெண்ணை ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு அனுப்புவது என முதலில் மீட்புக்குழுவினர் தயங்கியுள்ளனர். ஆனால், சபீனாவின் துணிச்சல் மற்றும் தைரியமான பேச்சால் நம்பிக்கை ஏற்பட்டு அவரை கயிறு மூலம் அக்கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தைரியமாக அக்கரைக்குச் சென்ற சபீனா, அங்கிருந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்திருக்கிறார்.


மழையில் நனைந்துவிடாதபடி ரெயின்கோட் அணிவிக்கப்பட்டு, கையில் மருத்துவப் பெட்டியைப் பிடித்துக் கொண்டு, காலுக்கடியில் சீறிப் பாய்ந்து வரும் வெள்ளத்தைப் பொருட்படுத்தாது, சபீனா ஜிப்லைனில் செல்லும் வீடியோ காட்சிகள் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


சபீனாவின் செயலை பாராட்டி, அரசு சார்பில் அவரது செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்திருந்தார்.


துணிச்சலாகச் செயல்பட்டு, காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த சபீனாவின் மருத்துவ சேவைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.மேடம் அவருக்கு தற்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad