நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் ஒரு பகுதியாக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரைப்பந்தய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பிரமாண்டமான குதிரை பந்தயம் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது அந்த மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு வழங்கப்பட்ட குத்தகை காலம் 1978-ம் ஆண்டு உடன் முடிந்த நிலையில், தொடர்ந்து, குத்தகை தொகையை செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்தது. மைதானம் செயல்பட்டு வந்த, வருவாய்த் துறை நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகை எடுத்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உபயோகப்படுத்தி வந்தது. ஆனால், முறையான குத்தகை பாக்கி செலுத்தவில்லை.
இதுதொடர்பாக வருவாய்த்துறை பலமுறை நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து கடந்த 2006-ல் உயர்நீதிமன்றத்தில் வருவாய்த் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2019-ல் குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் குதிரை பந்தய மைதானத்தை மீட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்தை மீட்டு சீல் வைத்தனர்.
ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டு அங்கு அறிவிப்பு பதாதை வைக்கப்பட்டுள்ளது.உதகை குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்த வருவாய்த் துறை அந்த மைதானத்தை தன் வசப்படுத்தியது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் வினோத்குமார் உடன் தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment