அமலுக்கு வந்தது இ-பாஸ் முறை வாகனங்கள் ஆய்வுக்கு பின்பு அனுமதி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 May 2024

அமலுக்கு வந்தது இ-பாஸ் முறை வாகனங்கள் ஆய்வுக்கு பின்பு அனுமதி

 


நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கூடலூர் பகுதியில் உள்ள 7 சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள்  e- பாஸ் ஆய்வுக்கு பிறகே அனுமதி...



நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் நிலவி வரும் நிலையில் இச்சமயங்களில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு வந்து செல்கின்றனர்.


இதனால் குறுகிய நகரமான உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அதனை தடுக்கும் வகையில் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்த பின்னே மாவட்டத்திற்குள் வர வேண்டும் எனவும், வாகனத்தில் வரும் எத்தனை நபர்கள் என்றும் தங்குமிடம் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், இ-பாஸ் பெறுவதற்கான இணையதளத்தையும் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இன்று முதல் இ-பாஸ் முறை அமலுக்கு வந்தது. இ-பாஸ் பெற்று வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்கும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, கக்கநல்லா, பாட்டவயல், சோலாடி, தொரப்பள்ளி, பந்தலூர் உள்ளிட்ட 7 சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுள்ளார்களா என கூடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு இ-பாஸ் பெற்றுள்ள சுற்றுலா பயணிகள் வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.


இதே போல் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை பர்லியார் சோதனை சாவடியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின் வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.


இ-பாஸ் பெறாத சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்ற பின்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


 தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad