கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பு சுவர் விழுந்தது : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 20 May 2024

கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பு சுவர் விழுந்தது :




கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயர தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.


கோத்தகிரியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில், வனவிலங்குகள் பள்ளி வளாகத்திற்குள் அடிக்கடி வந்து செல்வதைத் தடுக்கும் வகையில் பள்ளியின் ஒரு புறம் பாதுகாப்பு சுவர் கட்ட முடிவு செய்து, அதற்கென பொதுப்பணித் துறை சார்பில் 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் பணிகள் துவங்கின.


ஆனால் முறையான தூண்கள் அமைக்காமல், ஒற்றை கான்கிரீட் கற்களைப் பயன்படுத்தி பாதுகாப்புச் சுவர் வலுவின்றி கட்டப்படுவதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியதையடுத்து, பொதுப்பணித் துறை உதவி மேன்மை செயற்பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, அங்கு 4 1/2 அங்குல அகலத்தில் கான்கிரீட் ஒற்றை கற்களால் பாதுகாப்பு சுற்றுச் சுவர் கட்டுவதற்கு பதிலாக, கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவர் கட்டி, அதற்கு மேல் 15 அங்குல அகலத்திற்கு பாதுகாப்பு சுவரை வலுவாக கட்ட உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளியை சுற்றிலும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. முள் கம்பிகள் பொருத்தும் பணியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் கடந்த வாரம் நிறைவு பெற்றன.


கோத்தகிரி பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் மண்ணில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்புச் சுவர், தடுப்புச் சுவர் ஆகியவை இடிந்து தாழ்வான பகுதியில் உள்ள சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக கார் ஒன்று சென்றது. ஆனால் கார் சென்ற அடுத்த வினாடியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.


இந்த சாலை வழியாக பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, வனத்துறை அலுவலகம், குடியிருப்பு, அரசு ஊழியர் மற்றும் காவலர் குடியிருப்பு மட்டுமின்றி சேட் லைன், காம்பாய் கடை, மாரியப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் அதிக அளவில் சென்று வருவர்.


நேற்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் இந்த இடிபாடுகளில் சிக்காமல் தப்பிப் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தடுப்புச் சுவரை தரமாக கட்ட வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad