அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியரின் கனிவான வேண்டுகோள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 February 2024

அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியரின் கனிவான வேண்டுகோள்

 


அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியரின் கனிவான வேண்டுகோள்

கூடலூர்,  மதிப்பிற்குரிய பெற்றோர்களுக்கு வணக்கம். இவ்வாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும், தங்கள் பிள்ளைக்கு ஆசிரியர்கள் சார்பாக என் அன்பான வாழ்த்துக்களுடன் சில வேண்டுதல்களை பெற்றோர்களுக்கு முன் வைக்கிறேன். மாணவர்களை தேர்வுக்கு நன்கு தயாராக்க பெற்றோர்களின் பங்கு அவசியம்.


மாணவர்கள் படிப்பதற்கு தகுந்த ஆரோக்கியமான வீட்டின் சூழ்நிலையை உருவாக்கி அமைதியாக வைத்துக்கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை.  குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை பிள்ளைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. எந்த காரணம் கொண்டு வீட்டில் சண்டை இட்டுக் கொள்ளக் கூடாது அது மாணவர்களின் மனதை புண்படுத்தும். எல்லா விதத்திலும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.


மாணவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசி இதற்கு முன் தடைகள், தோல்விகள் ஏற்பட்டிருந்தால் அதை மறக்கச் செய்ய வேண்டும். ஒருபோதும் தங்கள் குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேச கூடாது. கண்டிப்பு காட்டுவதை தவிர்த்து அன்பாக பேசி ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிள்ளைகளின் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்கிவிடும். மாணவர்களை படி, படி என்று வற்புறுத்தாமல் அன்பாக பேசி படிப்பின் அவசியத்தை உணர்த்தி படிக்க கேட்டுக்கொள்வது நல்லது.


உங்கள் பிள்ளையிடம் நீங்கள் பேசுவதற்கு, தயவுசெய்து நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பிள்ளைகள் யாரிடம் அதிகம் பேசுகிறான் என்பதையும் கண்காணியுங்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், மதிப்பெண் சார்ந்தும், அக்கறை எடுத்து பேசும்போது, தங்கள் பிள்ளையை இந்தப் பருவத்தில் கண்ணாடியைக் கையாளுவதைப் போலக் கையாளுங்கள்.


உயர்கல்விக்கு மாணவர்களை தயார்படுத்த அடித்தளமாக அமைவது பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. தேர்வு பற்றிய அச்சத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் மேலும் அவர்களுக்கு சொந்த வேலையை கொடுத்து அழுத்தம் கொடுக்காமல் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து, ஊக்குவித்து தோழமையுடன் பழகி அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.


மாணவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் தடுக்க வேண்டாம். ஆனால் அதில் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கலாம் அது  அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அதே நேரம் முடிந்தவரை அவர்களிடம் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். சில மாணவர்கள் செல்போனில் படிப்பதாக கூறினாலும் அதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் செல்போன்களிருந்தும், தரமற்ற நண்பர்களிடமிருந்தும்  தவறான பாதைக்கு மாணவர்கள் செல்வதை பெற்றோர்கள் நன்கு அறிவர்.


தினமும் காலை 5.00 மணிக்கு எழுப்பிவிடவும் அதிகாலையில், மனம் சலனமின்றி இருப்பதால், படிப்பது மனதில் எளிதில்பதியும். இரவு 11.00 மணிக்கு மேல் படிக்க அனுமதிக்க வேண்டாம். தூக்கம் மிகவும் அவசியமானது.


சில மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற சிந்தனையில் உள்ளனர் ஆனால் அதிக மதிப்பெண்களே மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கிறது என்பதை நீங்களும் புரியவையுங்கள்.


நீங்கள் படுகிற கஷ்டத்தையும், ஆசிரியர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகளைப் பற்றி உங்கள் பிள்ளையிடம் பேசுங்கள். மதிப்பெண்களும், நல்ல மதிப்பீடுகளும் மாணவர்களுக்கு இரு கண்கள். குறைவான மதிப்பெண்கள் வாங்கும் பிள்ளைகளை அடிப்பதைவிட, திட்டுவதைவிட, அறிவுரை கூறுவதை விட, பெற்றோர்களின் அன்பான சொற்கள் மூலமாக தோழமை உணர்வோடு பிள்ளைகளை வழி நடத்துங்கள்.


தற்போது அரையாண்டு தேர்வும், முதல் திருப்புதல் தேர்வும் முடிவடைந்து மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. உங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களில் முன்னேற்றம் இருந்தால் மனதார பாராட்டுங்கள். பிள்ளைகள் படிக்கும் போது சிறிது நேரம் தோழமையுடன் அருகில் இருங்கள் அது உங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வத்தை தூண்டும். 


பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆசிரியர்களாக கண்காணித்து நாம் இணைந்து கைகோர்ப்போம். நம் பிள்ளைகளைக் கரைசேர்ப்போம். வாழ்த்துகளுடன் நன்றிகள்.


எஸ்பி.சுரேஷ் முதுகலை ஆசிரியர் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி கூடலூர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad