அரசியல் கட்சிகளுக்கு நீலகிரி தொகுதி மக்களின் தேர்தல் கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 February 2024

அரசியல் கட்சிகளுக்கு நீலகிரி தொகுதி மக்களின் தேர்தல் கோரிக்கை


அரசியல் கட்சிகளுக்கு நீலகிரி தொகுதி மக்களின் தேர்தல் கோரிக்கை 

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள்  முன்னேற்ற சங்கம் (VTMS) தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்,  டேன்டீ மக்கள் வாழ்வாதார பாதூகாப்பு முன்னணி ஆகிய அமைப்புகளின். சார்பாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை தேர்தல் களத்தில்  போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களின்  கவனத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு " கவனயீர்ப்பு ஆலோசனை கருத்தரங்கம்" கூடலூரில் 25.02.2024 அன்று நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதி முழுவதும் இருந்து அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

     

இதற்கு VTMS- ன்  மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. M.S.செல்வராஜ் தலைமை வகிக்க  - VTMS ன்  ஆலோசகர் திரு. கொளப்பள்ளி  இராதாகிருஷ்ணன், செயலாளர் திரு.தங்கச்சன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். அனைவரையும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க செயலாளர் திரு. விஜயசிங்கம் வரவேற்றார்.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவர் திரு. K.A. சுப்ரமணியம், கேரள மாநில மக்கள் இயக்க தலைவர் P.T. ஜோன் , VTMS - ன் மாவட்ட தலைவர் திரு. இராமகிருஷ்ணன் , திருமதி. லட்சுமி,டேன்டி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு முன்னணி தலைவர் திரு. பாண்டியன் , செயலாளர் திரு.காளிதாஸ், ஆலோசகர் திரு.கிருஷ்ணமூர்த்தி , திரு.கணேஷ், திரு. கிருஷ்ணகுமார், திரு. நட்ராஜ், திரு சந்திரமோகன் மற்றும் பலர் கருத்துரை வழங்கினார்.


    இவர்கள் பேசியபோது நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கிவிட்டது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டிப்போட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில்  ஈடுபட உள்ளனர்.  இவர்கள் அனைவரும் முதலில் தொகுதி மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை நேர்மையுடன் புரிந்து கொண்டு அதனை தீர்க்க உணர்வுபூர்வமாக சுயநலம் இன்றி உறுதியளிப்பது ஜனநாயக கடமையாகும்.

ஆகவே, தொகுதி முழுவதும் கிராம மக்களை நேரடியாக சந்தித்து கீழ்க்கண்ட கோர்க்கைகளை தொகுத்து இருக்கிறோம்.  இதனை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமையை நேரடியாக சந்தித்து கொடுத்து அவர்களின் தேர்தல் அறிக்கையில் மக்களின் கோரிக்கைகளை சேர்க்க வலியுறுத்த உள்ளோம்.  இதற்கு முக்கியத்துவம் கொடுத்து உறுதியளிக்கும் நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வார்கள் என தெரிவித்தனர் .


தேர்தல் களத்தில் முன் வைக்கும் முக்கிய கோரிக்கைகள்;


1 நீலகிரி தொகுதியில் பெரும்பான்மை மக்கள் தேயிலை விவசாயத்தையே நம்பி உள்ளனர்.  நலிவுற்று வரும் தேயிலை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். பசுந்தேயிலை கொழுந்து கிலோவிற்கு 33.75  நிரந்தர விலைக்  கொடுக்க வேண்டும். MS.சுவாமிநாதன்  கமிட்டி பரிந்துரையின் படி 50% சதவீத உற்பத்தி செலவு  கொடுக்கப்பட வேண்டும்.


2  .நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் கூடலூர் தொகுதி பிரிவு 17, 53, 16A, AW மற்றும் இதர பிரிவு நிலங்களின் விவசாயம் செய்யும் அனைவருக்கும் பட்டா கிடைக்கச் சிறப்பு சட்டம் நிறைவேற்றி அனைவருக்கும் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்கப்பட வேண்டும்.


3. 1964 - ஆம் ஆண்டு இந்திய அரசும் -  இலங்கை அரசும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை-ஶ்ரீமாவோ-    சாஸ்திரி ஒப்பந்தப்படி முழுமையாக மறுவாழ்வு செய்வோம் என சர்வதேச அரங்கில் அறிவித்து கூட்டி வரப்பட்ட மக்கள் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். 55 ஆண்டுகளுக்கு மேல் தங்களது உதிரத்தையும், வேர்வையையும் சிந்தி உருவாக்கிய டேன்டீயை அரசு கொஞ்சம் கொஞ்சமாக மூடி வருவதால் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 2022- ஆம் ஆண்டு அரசாணை எண் 172 மூலம் 2152 ஹெக்டேர் அழகான தேயிலைத் தோட்டங்களை கைவிட்டு உள்ளது.

டேன்டி தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.230 மட்டுமே கொடுப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, அடிப்படை சம்பளம் 500 கொடுக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டு  நிரந்தரம் செய்ய வேண்டும்.

பல கோடிகளை லாபமாக ஈட்டிக் கொடுத்த டேன்டியின் நஷ்டத்திற்கு நிர்வாக  முறைக்கேடு தான் காரணம்.  இதை கண்டுபிடிக்க நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அழகான டேன்டி தேயிலை தோட்டங்களை காடாக மாற்றும் வனத்துரை செயலாளரின்  உத்தரவு 173 ரத்து செய்யப்பட வேண்டும்.  பலக் கோடிகளை அரசு கொடுத்தும் டேன்டியை சீர் செய்ய முடியவில்லை.

ஆகவே, நிரந்தர தீர்வாக டேன்டி நிலத்தை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து 200 ஆண்டுகளாக கூலிகளாகவே இருக்கும் மக்களை நில உடமையாளராக மாற்ற வேண்டும்.


4. இந்த மண்ணின் பூர்வக்குடிகளான அனைத்து இன நிலமற்ற பழங்குடிகளுக்கு விவசாயம் செய்து நிம்மதியாக வாழ நிலம் மற்றும் தரமான வீடு வாழ்வாதார வசதிகள் செய்துக் கொடுக்கப்பட வேண்டும்.


5. முதுமலை புலிகள் காப்பகத்தில் பாரம்பரியமாக  வாழ்ந்த  மக்களை வெளியேற்றி  மறுவாழ்வு செய்கிறோம் என பல கோடி ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு வன உரிமை அங்கீகார சட்டம் 2006 -ன் படி வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.


6. காடுகளையும், கானுயிர்களையும், காடு       

சார்ந்து வாழும் மக்களையும், பழங்குடிகளையும் பாதுகாக்க 2006- ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த வன உரிமை அங்கீகார சட்டம் 2006, விதிகள் 2008/2012  முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதனை அமுல்படுத்துவதன் மூலம்  மட்டுமே காடுகளையும், கானுயிர்களையும் அதை சார்ந்து வாழும் மக்களையும் காப்பாற்ற முடியும்.

 முதுமலை புலிகள் காப்பகத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ள தேக்கு மரம் , உண்ணிச்செடி, பார்த்தீனியம், யூகாலிப்டஸ் போன்ற அந்நிய தாவரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு யானைகள் மற்றும்  கானுயிர்களுக்கு தேவையான பழ மரங்கள் மற்றும் இயற்கையான சோலை மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் வாழும் கிராமங்களுக்கு வன விலங்குகள் புகுந்து  உயிர் உடமைகளை சேதப்படுத்துவது தடுக்கப்படும். வன விலங்குகள் மோதலில் இறக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 20 லட்சம் கொடுப்பதோடு, குடும்பத்தில்  ஒரு நபருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

காடு மேலாண்மை செய்ய வன உரிமை அங்கீகார சட்டத்தை  முழுமையாக பயன்படுத்தி காடு சார்ந்த மக்களின் அதிகாரத்தின் கீழ் காடுகளையும் கானுயிர்களையும் பாதுகாக்கப்பட்ட வேண்டும். வனம் சார்ந்த பகுதியில் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் வன உரிமை அங்கீகார சட்டம் 2006-ன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். மற்றும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதோடு அனைவருக்கும் மகளிர் அணி தலைவி திருமதி. மாரியம்மா நன்றி தெரிவித்தார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad