நீலகிரியில் புலிகள் விஷம் வைத்து கொலையா?- 20 பேர் கொண்ட வனக்குழுவினர் விசாரணை
பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும்.
ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.
இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. இறந்து கிடந்த புலிகளின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதால் பலியாகவில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
அவலாஞ்சி வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடக்கும் 2 புலிகளுக்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டிதலின்படி இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன்பின்னரே புலிகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி வனப்பகுதியில் புலிகள் சாவு தொடர்கதையாக நீடித்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. அங்கு உள்ள மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி செத்து கிடந்தது.
நடுவட்டம் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்த நிலையில் அவலாஞ்சி வனப்பகுதியில் தற்போது மேலும் 2 புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவர்கள் காட்டு விலங்குகளை கொன்று அவற்றை ஊருக்குள் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். புலியின் தோல், பற்கள் ஆகியவை மதிப்புவாய்ந்தது. எனவே வனவிலங்கு வேட்டைக்காரர்கள் வியாபார நோக்கத்துக்காக புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது.
புலிகள் இறப்பு தொட ர்பாக உண்மை நிலையை கண்டறிய வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி வனக்கோட்ட தலைமையிட மாவட்ட அலுவலர் தேவராஜ் தலைமையில் ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் மற்றும் ஊட்டி தெற்கு வனசரக அலுவலர் (பொறுப்பு) சசிகுமார் மேற்பார்வையில் வனவர்கள், வனக்கா ப்பாளர், வனகாவலர்கள் என 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் சம்பவ இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது எப்படி இறந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment