மகா சிவராத்திரி வரலாறு மற்றும் ரகசியங்கள்.... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 February 2023

மகா சிவராத்திரி வரலாறு மற்றும் ரகசியங்கள்....



சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி. சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம். சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா? மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும், முதலும், முடிவும் இல்லாதவர். மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது… அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும். 


பிரம்ம தேவன் சிவனாரின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யும், திருமாலானவர் திருஅடியைக் காணவில்லை என்று மெய்யும் விளம்பின படியால், நான்முகனுக்கு கோவிலே இல்லாமல் போவது என்ற சாபமும், திருமாலுக்கு காத்தற்சிறப்புரிமை உண்டாகக் கடவது என்று வாழ்த்தும் அருளினதன்றி, அக்காட்சி ஒருமூன்றேமுக்கால் நாழிகை அளவு விளங்கி மற்ற தேவர்கள் எல்லோரும் கண்டுள்ளமையால், லிங்கோற்பவ காலமே முகூர்த்தம் என்றும், இராத்திரியில் பரமசிவன் மகேஷ்வர மூர்த்தமாகத் தோன்றினபடியால் சிவராத்திரி என்றும் பெயர் பெற்றது. வேடனானவன் இதே நாளில் வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சித்ததால் சிவதரிசனம் பெற்றான் என்பதே உண்மையாகும். ஆனால், இதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியான காரணம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்கொண்டோம். நம் முன்னோர்கள் இதைப்புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத்தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.


ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு, மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது. மனதில் சொல்லவேண்டிய மந்திரம் ‘சிவாய நம ஓம்சிவாய சிவ ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ சிவ ஓம்’ இப்படி செய்வது ஒரு விதம், மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது இன்னொரு விதம், சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம். தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம். இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை. சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள் சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை (சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாறுதலும் செய்யவேண்டாம்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக  நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad