கூடலூர் வழியாக கேரளாவுக்கு போதை பொருள் கடத்திய தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர், கூடலூர்-கேரளா எல்லையான வழிகடவில் கேரளா மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் போலீசார் மற்றும் மகளிர் போலீசார் நேற்று கூடலூரில் இருந்து வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது ஜீப்பில் வந்த ஒரு தம்பதியை நிறுத்தினர். அதற்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தம்பதி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது கூடலூரில் தோட்டம் வைத்து உள்ளதாகவும், அங்கு பணியாற்றுவதற்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று தோட்டத்தில் இறக்கிவிட்டு திரும்பி வருவதாகவும் கூறினர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட மற்றும் விலை உயர்ந்த எம்.டி.எம். போதை பொருள் தலா 25 கிராம் கொண்ட 3 பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தம்பதி உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பெங்களூருக்கு சுற்றுலா செல்வது போல் சென்று விட்டு, போதை பொருளை கூடலூர் வழியாக கடத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த அஸ்லம் மூதீன், அவரது மனைவி சபீனா மற்றும் முகமது ஷாதத், வழிக்கடவை சேர்ந்த கமருதீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் நீலகரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment