நீலகிரி சமூக ஆர்வலருக்கு பாராட்டு.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு.கே. ஜே. ராஜு அவர்களுக்கு 'உத்தமர் காந்தி விருது' வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றார். மஞ்சூர் காந்தி சேவா சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். உதகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கணேஷ், தொழிலதிபர் திரு. போஜராஜன், மற்றும் தொழிலதிபர் திரு. சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். காந்தி சேவா சங்கம் செயலர் திரு. போஜன் அவர்கள் தமது வரவேற்புரையின் போது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜு அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக கூறினார். ஏற்புரையின் போது பேசிய ஆசிரியர் ராஜு அவர்கள் கூறிய கருத்துக்கள்.....
காந்தி ஜெயந்தி விழாவில் காந்திய கொள்கைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறுவது சிறந்த பணியாகும். மதுவிலக்கு, எளிமையான வாழ்க்கை, கிராமப் பொருளாதார மேம்பாடு ஆகிய காந்திய கொள்கைகள் இன்று காலாவதியாகி போய் உள்ளன என பலர் கருத்துகின்றனர். வளர்ச்சியின் பெயரால் ஆடம்பரமான வாழ்க்கை, கட்டற்ற நுகர்வு கலாச்சாரம் கார்ப்பரேட்டுகளின் லாபவெறி, வரைமுறை இன்றி இயற்கை வளங்களை சுரண்டுதல் போன்ற பல காரணங்களால் இன்று உலகம் முழுவதிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. பூமியால் தாக்குப் பிடிக்க முடியாத இந்த வளர்ச்சி என்பது ஒரு நாள் தரை தட்டி நிற்கும். அப்பொழுதுதான் மக்கள் காந்தியின் மகிமையை புரிந்து கொள்வார்கள்! காந்தியம் என்பது மனித சமுதாயத்தின் உப்பு போன்றது. காந்தி தமது வாழ்க்கையின் மூலம் எழுத படிக்கத் தெரியாத ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் சுதந்திர தீயை மூட்டியவர். வருங்கால சமுதாயத்திற்கு காந்தியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் அனைவரின் கடமை என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். உதகை அரிமா சங்க நிர்வாகி திரு. மணிவண்ணன், மஞ்சூர் ரோட்டரி சங்கத் தலைவி திருமதி. சரஸ்வதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் பல போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment