உதகை அருகே விபத்து ஒருவர் பலி:
உதகை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த எடக்காடு காந்தி கண்டி பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் . இவா் அந்தப் பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவரது மகன்கள் ஸ்ரீசாந்த் (16), கிருத்திக் (15). இதில் ஸ்ரீசாந்த் கோவையில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கிருத்திக் எடக்காடு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாா். இந்நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் தொடங்கியதால் கோவைக்கு செல்ல திட்டமிட்ட ஸ்ரீசாந்த், அதற்கு முன்னதாக எடக்காடு பள்ளியில் தம்பியை விடுவதற்காக உறவினா் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு தம்பியை பள்ளியில் விட்டுவிட்டு காந்திகண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
இருசக்கர வாகனத்தில் அவா் மிக வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து அவரது வாகனம், எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஸ்ரீசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் மஞ்சூா் காவல் ஆய்வாளா் நிா்மலா, உதவி ஆய்வாளா் பாலசிங்கம் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணைதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment