மசனகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஜி ஆர் ஜி நினைவு மேல் நிலை பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் மரம் நடு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்களாவன -
பூமி தன்னுடைய வரலாற்றில் சமநிலை பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் எல்லாம் ஒரு பேரழிவை உண்டாக்கி தன்னை சமன்படுத்திக் கொள்ளும். இதுவரையில் பூமி ஐந்து முறை பேரழிவை சந்தித்துள்ளது. டைனோசர்கள் என்ற ராட்சச பல்லி இனங்கள் எல்லா உயிரினங்களையும் தின்று அழித்த போது பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டது. அதனால் ஒரு பூமி ஒரு பேரிடரை ஏற்படுத்தி டைனோசர்களை அழித்து தன்னை சமன்படுத்திக் கொண்டது. பூமியின் வரலாற்றில் ஆறு வகையான மனித குலம் தோன்றி அழிந்து உள்ளது என அறிவியல் கூறுகிறது. மிக அண்மை காலத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் என்ற மனித குலத்தை தற்போது வாழும் மனித குலம் கொன்று அழித்தது. மனிதர்கள் வரலாறு நெடுக சண்டையிட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை சந்தித்த உலகம் மூன்றாவது உலகப்போருக்கு தயாராக இல்லை. ஏனெனில் தற்போதைய போர் கருவிகளான அணுகுண்டுகள் எதிரிகளை மட்டுமல்ல மட்டுமல்ல தங்களையும் அழித்துவிடும் என்று எல்லா நாடுகளுக்கும் தெரியும். எனவே இன்னொரு உலக யுத்தம் வராது என உலகப் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் யுவல் நோவா ஹராரி என்ற அறிஞர் கூறுகிறார். தற்போது அணுகுண்டுகளுக்கு பதிலாக புதிதாக வந்திருக்கும் மற்றொரு அழிவுக்கருவி தான் காலநிலை மாற்றம். புவி வெப்பம், பல்லுயிர் சூழல்களின் அழிவு, பனி மலைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல், வெப்ப அலைகள், வலிமையான புயல்கள் போன்ற அனைத்துமே காலநிலை மாற்றம் என்ற அழிவு கருவியின் பகுதிகளே. பூமி ஆறாவது முறையாக தன்னை சமன்படுத்த முனைந்துள்ளது என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பூமி எந்த காலத்திலும் அழியாது. தன்னை சமன்படுத்திக்கொள்ள பூமியில் வாழும் சில உயிரினங்களை அழிக்கும். ஆறாவது அழிவின் போது அழியப் போகும் உயிரினம் மனித குலமாக இருக்கலாம். பூமியின் பரிணாமம் என்ற திரைப்படத்தை ஆயிரம் முறை திரும்ப போட்டுப் பார்த்தாலும் மீண்டும் மனித குலம் தோன்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஒரு விஞ்ஞானி எச்சரிக்கிறார். பூமியில் முதலில் தோன்றிய சைனோ பாக்டீரியா என்ற உயிரினம் கழிவு பொருளாக ஏராளமான ஆக்சிஜனை உற்பத்தி செய்தது. அந்த இனம் அழிந்து விட்டது. ஆனால் அது உற்பத்தி செய்த ஆக்சிஜனை உண்டு வாழக்கூடிய ஏராளமான உயிரினங்கள் பூமியில் தோன்றியுள்ளன. அதுபோல மனிதகுலம் உற்பத்தி செய்துள்ள கழிவு பொருட்களை உண்டு வாழும் புதிய உயிரினங்கள் தோன்றலாம். தற்போது உள்ள பூமி தன் சூழலை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பூமிக்கு மனித குலம் தேவையில்லை. மனிதர்களுக்குத்தான் பூமி தேவை. எனவே நமக்காக இந்த பூமியை காக்க வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார். பின்னர் பள்ளி வளாகத்தில்
நூறு மரக்கன்றுகள் மாணவர்களால் நடப்பட்டன. முன்னதாக பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அணில் குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் மாதேவன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment