நீலகிரி மாவட்டத்தில் தயார் நிலையில் மீட்பு பணியினர்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
குறிப்பாக, குன்னுார்,கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் அவ்வப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பேரிடர் கண்காணிப்பு நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட, 42 மண்டல குழுக்கள் களத்தில் உள்ளன.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு வெலிங்டன் எம்.ஆர்.சி., ரவுண்டானா அருகில் கார் மீது மரம் விழுந்து, ஓட்டுனர் ஜாகீர் உசேன் என்பவர் உயிரிழந்தார்.
மேல் பாரத் நகரில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் லாரியின் மீது மரம் விழுந்தது.குன்னுார், கோத்தகிரி, குந்தா வட்டங்களில், 20 மரங்கள் ஆங்காங்கே சாலையில் விழுந்தது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ பகுதிக்கு உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சென்று மரங்களை 'பவர் ஷா' உதவியுடன் அறுத்து அகற்றினர்.
மாவட்டத்தில் மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய, 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டு இப்பகுதியினை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் , 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க , 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க, மாவட்ட அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 மற்றும் 0423-2450034, 2450035 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தவிர, 9943126000 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment