நீலகிரி மாவட்டம் கூடலூரில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக கூடலூர் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நுண்ணறிவு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் திரு. சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு.கே.ஜே. ராஜு அவர்கள் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்ட கருத்துக்களாவன......
அறிவு என்பது பலவகையான தகவல்களை மூளையில் சேமித்து வைப்பது. உதாரணமாக இருசக்கர வாகனத்தில் ஏன் டீசல் பயன்படுத்த முடியாது, மிளகாய் ஏன் காரமாக இருக்கிறது, சூரியன் எந்த திசையில் உதிக்கிறது என்பன போன்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் மூளையில் சேமித்து வைக்கக்கூடிய தகவல்கள். இவற்றை அறிவு என்று கூறலாம் ஆனால் நுண்ணறிவு என்பது வேறு. ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை மூளை சிந்தித்து தேடி கண்டுபிடிப்பது தான் நுண்ணறிவு. உதாரணத்திற்கு ஒரு லிட்டர் பாலில் அரை லிட்டர் தண்ணீரை சேர்த்தால் அந்த கலப்பட பாலில் தண்ணீர் எத்தனை பங்கு, பைக்கில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் 20 நிமிடங்களில் எவ்வளவு தூரம் செல்வார் என்பன போன்ற கேள்விகள் அவர்களுடைய சிந்திக்கும் திறனை வளர்த்து மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இதுவே நுண்ணறிவு எனப்படும். நமது தற்போதைய கல்வி முறை மாணவர்களிடையே மூளையில் நிறைய தகவல்களை திணிக்கும் ஒரு நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பாட புத்தகத்தில் உள்ள தகவல்களை கேள்விகளாக மாற்றி கேட்பதும் மாணவர்கள் அதற்கு பதில் அளிப்பதும் அறிவு சார்ந்த விஷயமே.
இத்தகைய கேள்விகள் எல்லாம் நுண்ணறிவை வளர்க்காது. உண்மையில் கல்வி என்பது மாணவர்களின் சிந்தனை ஆற்றலை அதிகரிப்பதும் சமயோசித புத்தியை வளர்ப்பதும் ஆகும். ஆசிரியர்கள் பாட புத்தகத்தில் தரப்பட்டுள்ள தகவல்களை கேள்விகளாக மாற்றி பதிலை பெறுவது என்ற நடைமுறையின் கூடவே மாணவர்களது நுண்ணறிவை வளர்க்கும் கேள்விகளையும் பயன்படுத்த வேண்டும். மாணவர்களும் தங்களது நுண்ணறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் கூகுளில் ஏராளமான கேள்விகள் கொட்டி கிடக்கின்றன. மாணவர்களின் நுண்ணறிவை வளர்ப்பதில் கணிதத்தின் பங்கு அதிகமாக உள்ளது. இனி எந்த ஒரு போட்டித் தேர்விலும் மாணவர்களின் நுண்ணறிவை தான் சோதிப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட செயலர் ஆசிரியர் திரு. மணிவாசகம் மற்றும் தேசிய பசுமைப்படை திட்டத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் நெஸ்ட் அறக்கட்டளையின் தாளாளருமான திரு. சிவதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment