பந்தலூர் முழுநேர கிளை நூலகத்தில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு கருத்தரங்கமும் நடைபெற்றது.
மகாத்மா காந்தி பொது சேவை மையம், பந்தலூர் முழுநேர கிளை நூலகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் லூ. கிளமண்ட் தலைமை வகித்தார். பந்தலூர் முழுநேர கிளை நூலகர் வெ. அறிவழகன் வரவேற்றார்.
பந்தலூர் வாசகர் வட்டத் தலைவர் பெ. முத்துக்குமார், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சு. சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மையத் தலைவர் அ. நௌசாத், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப. அஜித், கொளப்பள்ளி நூலகர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய வனப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற இ. அருண் வடிவரசன் (IFS) பேசுகையில், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புடன் தங்களது எதிர்கால இலக்கை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற திறமையுடன் தொடர்ச்சியான முயற்சி, நேர மேலாண்மை, தினசரி வாசிப்பு மற்றும் திட்டமிட்ட பயிற்சி அவசியம். மேலும், செய்தித்தாள் மற்றும் புத்தக வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொண்டு பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பாட அறிவை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் 18-வது இடம் பெற்ற ஸ்ருதி IAS பேசுகையில், மாணவர்கள் தற்போதைய சூழ்நிலைகள் அல்லது வசதிகளை மட்டுமே கருத்தில் கொண்டு எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது. உயர்ந்த இலக்கை நிர்ணயித்து, அதை அடைவதற்கான சிறு இலக்குகளை தினசரி திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும், முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்காவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.bபெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி தங்களுக்கேற்ற கல்வி மற்றும் தொழில் பாதையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து, பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற யமுனா, இரண்டாமிடம் பெற்ற தனுசிகா, மூன்றாமிடம் பெற்ற சுபாஷிணி ஆகியோருக்கும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற பாத்திமா பிதா, இரண்டாமிடம் பெற்ற லியானா தெஸ்னி, மூன்றாமிடம் பெற்ற யுவராஜ் ஆகியோருக்கும் பரிசுகளும் பணமுடிப்புகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் பந்தலூர் முழுநேர கிளை நூலகர் நித்தியகல்யாணி நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment