நீலகிரி மாவட்டம் – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
நீலகிரி மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாணவ, மாணவியருக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் எச். ஷோபனா அவர்கள் வரவேற்று, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு பி. தட்சிணாமூர்த்தி அவர்கள் அடிப்படை தீ பாதுகாப்பு முறைகள், தீ விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தலைமைத் தீயணைப்பாளர் திரு காமராஜர் அவர்கள் எல்.பி.ஜி. (LPG) எரிவாயு தொடர்பான தீ விபத்துகளுக்கான காரணங்கள், அவற்றைத் தவிர்க்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
பின்னர், தீயணைப்பாளர் திரு மாரிமுத்து அவர்கள் வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள், பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகள், தீயணைப்பான்களின் வகைகள் மற்றும் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தும் விதம் குறித்து செயல்விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் வீரர்கள் பல்வேறு அவசரகால சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை செயல்முறை விளக்கங்களுடன் நேரடியாக நிகழ்த்திக் காட்டினர். இச்செயல்விளக்கங்கள் மாணவ, மாணவியரிடையே மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அனைவரின் பாராட்டையும் பெற்றன.
நிகழ்வின் நிறைவாக, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் முருகானந்தம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
மேலும் கோபி, அறிவழகன், விதுன் தவனேஷ், விக்னேஷ், கௌதம்,மார்ட்டின் ஆகிய மாணவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு உறுதுணை வழங்கினர்.
மாணவர்களிடையே தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவசரகாலங்களில் பொறுப்புணர்வுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படும் திறனை வளர்க்கவும் இம் முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment