கூடலூர் அரசு கல்லூரியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 November 2024

கூடலூர் அரசு கல்லூரியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு


கூடலூர் அரசு கல்லூரியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்ட கிளை முன்னெடுத்துள்ள காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024 திட்டத்தின் கீழ் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  காலநிலை மாற்றமும் அறிவியலும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு மற்றும் மரம் நடும்  விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சுபாஷினி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கள இயக்குனருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் கே .ஜே .ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்கள்.....

 

காலநிலை மாற்றத்தையும் அதன் தாக்கத்தையும் கண்டறிந்து வெளியிட்டது அறிவியலின் மிகப்பெரிய சாதனையாகும். அண்டார்டிக்காவில் ஒரு லட்சம் ஆண்டுகளாக படித்துள்ள பனிக்கட்டிகளின் தடிமனை  கண்டறிந்து அதன் மூலம்  காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அறிவியல் துல்லியமாக கணக்கிட்டு உள்ளது. மேலும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சிறப்பு சாட்டிலைட்டுகள் மூலம்  கடல் நீரின் சுழற்சி காற்றுகளின் திசை மற்றும் வேகம் ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு காலநிலை மாற்றத்தின் போக்கை விரிவாக அறிவியல் கண்டறிந்துள்ளது. தற்போதும் கூட அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஒப்புக் கொள்வதில்லை என்பது வருந்தத்தக்கது. காலநிலை மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை நாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தான். அண்மையில் தமிழக அரசு வெப்ப அலைகளை இயற்கை பேரிடராக  அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கோடைகால வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. 2023 ஐ விட 2024 ஆம் ஆண்டில் கோடை கால வெப்ப நிலை ஈரோடு சேலம் போன்ற பகுதிகளில் 110° அளவில் இருந்தது கவனிக்கத்தக்கது. பகல் நேர வெயிலின் தாக்கத்தை விட இரவு நேர வெப்பநிலையினால் தான் பெரும்பாலான இறப்புகள் ஏற்படுகின்றன என ஒரு ஒரு ஆய்வு கூறுகிறது. பகல் நேர வெப்பத்தில் வேலை செய்த உழைக்கும் தொழிலாளிகள் இரவு நேர வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்பது என்பது இதுவரை எந்த கணக்கிலும் கொள்ளப்படவில்லை. இனிமேல் உழைக்கும் மக்களுக்கு தமிழக அரசின் இழப்பீடு தொகை கிடைக்கும் என நம்பலாம். அறிவியல்  காலநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து உள்ளது. பழைய குண்டு பல்புகளை விட நவீன எல்இடி பல்புகள் பத்தில் ஒரு பங்கு மின்னாற்றலை  மட்டும் பயன்படுத்தி நமக்கு அதிக ஒளியை தருகின்றன. ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன பிரிட்ஜ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அண்டார்டிகா போன்ற துருவப்பகுதியில் பனி மலைகள்  உருகும் நிகழ்வை தடுக்க அறிவியல் புதிய வழிகளை கண்டறிந்து உள்ளது. அதற்கு சற்று கூடுதல் செலவாகும். போர் ஆயுதங்களுக்காகவும் ஏவுகணைக்களாகவும் அணுகுண்டு களுக்காகவும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடும் உலக நாடுகள் இந்த பூமியை காக்க ஒரு ரூபாய் கூட செலவழிக்க தயங்குவது மனித குலத்தின் அழிவிற்கான ஒரு பாதையே. காலம் கடக்கும் முன் இந்த பூமியை காக்க பேசிக்கொண்டே இருப்பதை விட  அனைவரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுவது தான் பூமியை காக்க  மனித குலத்திற்கு உள்ள ஒரே வழி என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். முன்னதாக அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் தலைமையாசிரியர் சங்கர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி விரிவுரையாளரும் நாட்டு நல பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மகேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலர் தலைமையாசிரியர் மணிவாசகம் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர். இந்த நிகழ்வின் தொடர்பாக புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad